டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பொருத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டுக்கணக்கில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். சுமார் 1481 நாட்கள் அவர் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரை பின்னுக்கு தள்ளி கேன் வில்லியம்சன் முதலிடத்தை பிடித்தார். தற்போது மீண்டும் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சரியாக விளையாடாத கேன் வில்லியம்சன்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் மிக சிறப்பாக விளையாடவில்லை. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிக மோசமாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 13 ரன்களும் அதற்கு அடுத்த இன்னிங்சில் ஒரு ரன் மட்டுமே அடித்தார்.
அதன் பின்னர் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் குறைந்துள்ளது.
மீண்டும் தன்னுடைய முதல் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்
இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது முதலிடத்தில் இருக்கும் ஸ்டேவே ஸ்மித் இதற்கடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்கொள்ள இருக்கிறார்.
அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள் வரும் நிலையில் அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய டெஸ்ட் தரவரிசை புள்ளிகளை கூட்டிக்கொண்டு போகப் போகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். எனவே அவரது நம்பர் 1 இடத்தை மீண்டும் எட்டிப்பிடிக்க அனைத்து பேட்ஸ்மேன்களும் போராட வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது
டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது இடத்தில் கேன் வில்லியம்சன், மூன்றாவது இடத்தில் மார்னஸ் லபுஸ்சாக்னே இருக்கின்றார்கள். நான்காவது இடத்தில் ஜோ ரூட் இருந்த நிலையில் தற்பொழுது விராட் கோலி அவரை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்தை பிடித்துள்ளார். எனவே ஐந்தாவது இடத்தில் தற்போது ஜோ ரூட் இருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட், ஏழாவது இடத்தில் ரோகித் சர்மா, எட்டாவது இடத்தில் ஹென்ரி நிகோல்ல்ஸ், ஒன்பதாவது இடத்தில் டேவிட் வார்னர் மற்றும் பத்தாவது இடத்தில் பாபர் அசாம் அடுத்தடுத்து இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.