டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; ஸ்டோக்ஸ் மரண மாஸ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முதல் முறையாக பும்ரா இடம்பெறும் கவுரவத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 13-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலியைக் காட்டிலும் 6 புள்ளிகள் பின்னடைந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் உள்ளார்.
3-வது இடத்தில் கேன் வில்லியம்ஸன், 4-வது இடத்தில் சத்தீஸ்வர் புஜாரா, 5-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் ஹென்றி ஆகியோர் உள்ளனர்.
6-வது இடத்தில் இலங்கை கேப்டன் கருணாரத்னே, 7-வது இடத்தில் ஜோ ரூட், 8-வது இடத்தில் டாம் லாதம், 9 மற்றும் 10-வது இடங்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்ரம், டீ காக் ஆகியோர் உள்ளனர்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைசதம், சதம் அடித்த இந்திய வீரர் ராஹனே 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரில் 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒற்றை ஆளாக இருந்து வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்ததாக 13-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களில் மே.இ.தீவுகள் அணியை 2-வது இன்னிங்ஸில் திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (774 புள்ளிகள்) தரவரிசையில் 9 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.