இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் கிடையாது.. ஐசிசி எடுக்கும் அதிரடி முடிவு! எத்தனை நாட்களாக குறைக்கப்படும்?
டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் கணக்கை குறைக்க ஐசிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்துவருகிறது.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எவ்வித மாற்றமும் இல்லை. அடுத்ததாக, 2023 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து டெஸ்ட் போட்டிகளின் நாட்கள் கணக்கை குறைத்து, புதிய நாட்கள் அளவுடன் கொண்ட டெஸ்ட் போட்டிகளை கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது.

டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைகள் குறையாமல் இருக்க வேண்டும். அதே நேரம் டெஸ்ட் போட்டிகள் சீரான இடைவெளியில் நடத்தவேண்டும். டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஐசிசி எடுக்கவுள்ளது.
இதன்மூநாட்களை குறைக்கும்பட்சத்தில் பல நாள்கள் கூடுதலாகக் கிடைக்கும். அதைவைத்து, அதிகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்பது ஐசிசியின் வருங்காலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

உதாரணமாக 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை நான்கு நாள்களாகச் சுருக்கினால் 335 நாள்கள் மிச்சமாகும். இதனைக் கொண்டு கூடுதலாக ஒருநாள், டி20 ஆட்டங்களை நடத்தலாம்.
மேலும் 4 நாள்கள் டெஸ்ட் எனும்போது கூடுதலாகவும் டெஸ்ட் ஆட்டங்களை விளையாட முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. நான்கு நாள் டெஸ்ட் என்றால் நான்கு டெஸ்டுகளுக்குப் பதிலாக ஐந்து டெஸ்டுகளை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில், நாள் ஒன்றுக்கு 90 ஓவர்கள் வீசவேண்டும் என்கிற விதிமுறை மாற்றப்பட்டு 98 ஓவர்களாக அதிகரிக்கவும் ஐசிசி திட்டமிடுகிறது.