பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் உலக கோப்பையில் மோதும் போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் எந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்துமோ, அதை விட பல நூறு மடங்கு பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய போட்டி என்றால் அது பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்று கூறினால் அதற்கு எதிர்ப்பேச்சு எழாது.
இரு நாடுகளுக்கும் இடையேயான நிகழ்ந்துவரும் தாக்குதல்களும் பகைமை உணர்வும் அனைவரும் அறிந்ததே. அந்த உணர்வை கிரிக்கெட் ரசிகர்கள் அப்படியே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளிலும் வெளிப்படுத்தி வருவதை ஆண்டாண்டு காலங்களாக நாம் கண்டு வருவதுதான்.
கடந்த சில வருடங்களாக தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்பட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது பாகிஸ்தான் அணி. அதன் பிறகு இரு அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16ஆம் தேதி உலக கோப்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில், லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு நுழைவதே சந்தேகம் என எதிர்பார்த்த நிலையில், சிறப்பான கம்பேக் கொடுத்து, அரையிறுதி சுற்றுக்குள் நுழைத்து போட்டியை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இறுதிப் போட்டியிலும் பலம் மிக்க இந்திய அணியை எப்படி அசால்டாக மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை நாம் அனைவரும் கண்ட ஒன்றே.
நான் பல வருடங்களாக பாகிஸ்தான் அணியை கவனித்து வருகிறேன். தோல்வியடைந்த பிறகும் சற்றும் மனம் தளராமல் சிறப்பான கம்பேக் கொடுத்து தொடரை கைப்பற்றும் அளவிற்கு வல்லமை படைத்தவர்கள் பாகிஸ்தான் அணி. இதுவரை உலககோப்பையில் இந்திய அணியிடம் வெற்றியே பெற்றிராத பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் உலக கோப்பைக்கு களமிறங்குவதால், அங்கு நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். உலகில் உள்ள மற்ற ரசிகர்களைப் போலவே அதை பார்க்க நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன்.

இந்திய அணிக்கு எதிராக உலக கோப்பையில் முதல் வெற்றியை பெறத்துடிக்கும் பாகிஸ்தான் அணியும், சாம்பியன்ஸ் டிராபியில் படுதோல்வியடைந்த பிறகு பதிலடி கொடுக்க துடிக்கும் இந்திய அணியம் மோதிக்கொள்ளும் போட்டி கிரிக்கெட் உலகிற்கு உச்சத்தை பெற்றுத்தரும் எனவும் நாசர் உசேன் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா நகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு நடைபெறும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.