பாகிஸ்தானை இந்தியா பந்தாடும்; சுரேஷ் ரெய்னா உறுதி
கடந்த தொடர்களை போலவே இந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தவரும், இந்திய அணி வீரருமான சுரேஷ் ரெய்னா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த நேரத்தில் யாரும் பாகிஸ்தான் போட்டியை யாரும் சிந்தித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால், இப்போதுள்ள நிலையில், நாம் தொடக்கத்தில் உள்ள போட்டிகளை நாம் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்தியா மோதும் 3 போட்டிகளை வென்றுவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒரு பிரச்சினையாக இருக்காது.
ஆனால், ஒருவேளை தொடக்கத்தில் சில போட்டிகளில் நாம் தோல்வி அடைந்துவிட்டால், பாகிஸ்தானுடனான போட்டியின் போது இந்தியஅணிக்கு அழுத்தம் இருக்கும். ஆனால், முதலில் வரும் 3 ஆட்டங்களில் நாம் வென்றுவிட்டால், இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது உலகக் கோப்பையில் நாம் வைத்திருக்கும் இந்த அசைக்கமுடியாத சாதனை தொடரும்.
பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறந்து விளங்கும் அணி வீரர்கள் கொண்டதாக இந்திய அணி இருக்கிறது, நன்றாகவும் விளையாடி வருகிறார்கள். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 9 ஆட்டங்களில் நாம் விளையாட உள்ளதால், தொடக்கத்தில் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மிக முக்கி்யமானது.
இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றுவிட்டது. நாமும் தொடக்கத்தில் வரும் 3 ஆட்டங்களை வென்றுவிட்டால், எந்த அணியும் இந்திய அணியை அரையிறுதிக்குள் செல்வதை தடுக்க முடியாது.
இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி, மகிபாய்(தோனி) இருவரும் முக்கியமாக கவனிக்கப்படுவார்கள். இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான பங்களிப்பை செய்துள்ளார்கள், அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களும் இருவர்தான்.
நாம் தென் ஆப்பிரி்க்காவையும், இங்கிலாந்து அணியையும் மட்டும் வென்றுவிட்டால், நாம் உலகக் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.
என்னைப் பொருத்தவரை இங்கிலாந்து அணி வலுவான அணியாக இருக்கிறது. குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வருகைக்குப் பின் அணியின் பலம் அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். வெறும் வார்த்தைக்காக அல்லாமல் களத்திலும் இங்கிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது” என்றார்.