உலக கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வழக்கமாக அணியும் நீல நிற உடையை தவிர்த்து காவி நிற உடையில் களமிறங்க இருப்பதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
2019 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தேதி (ஜூன் 20ஆம் தேதி) வரை லீக் சுற்றில் 26 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. இதில் இந்திய அணி ஆடிய நான்கு போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவிருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து ஆனது. இதனால் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வென்று புள்ளி பட்டியலில் 7 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.
காவி நிற உடை அணிந்து களமிறங்கும் இந்தியா
அதனை அடுத்து ஜூன் 30ம் தேதி நடக்கவிருக்கும் லீக் போட்டியில் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் போட்டிக்கான பிரதான உடை நீல நிறத்தில் இருக்கும். ஆனால் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி மோதும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க முடியாது இதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடையில் களமிறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து எவ்வித மாற்றமும் செய்து கொள்ள வேண்டாம் எனவும் இந்திய அணி தங்களது உடையில் மாற்றம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் குறிப்பாக இந்திய அணியின் உடையில் பிரதானமாக காவி நிறம் இருக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் நெட்டிசன்கள் இந்திய அணிக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கும் தொடர்பு உள்ளதா? இல்லை! பிரதமரின் வலியுறுத்தலின் பேரில் இது போன்ற புதிய நேரத்தை பிசிசிஐ அனுமதித்துள்ளதா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பி வருகின்றனர். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது.