இதுக்கு மட்டும் ஓகே சொல்லி பாருங்க., தல மாஸ் காட்டுவார்; ஹர்பஜன் சிங் சொல்கிறார்
மகேந்திர சிங் தோனியின் சிக்ஸ் அடிக்கும் திறன், எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடிக்கும் உந்துதல் தோனியிடம் இன்னும் உள்ளது, அணி நிர்வாகம் அவரை தன் முழு பேட்டிங் சுதந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம் தோனி மெதுவாகத் தொடங்கி பிறகு ஆட்டத்தை கடைசி வரை இட்டுச் சென்று அடித்து ஆடி வெற்றி பெறச் செய்கிறார், இது சிலவேளைகளில் வெற்றியாகவும் பலதருணங்களில் முடியாமலும் போகிறது. குறைந்த இலக்கென்றால் அவரது உத்தி சரி, உலகக்கோப்பையில் இங்கிலாந்து ரன்குவிப்பு பிட்ச்களைப் போட்டால் இவரது ‘லொட்டு’ டெக்னிக் எடுபடாது என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
எடுத்த எடுப்பில் அடிக்க ஆரம்பிப்பதுதான் தோனியின் சிறப்பான தன்மை. அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் பல நேரடியாக இறங்கியவுடன் பெரிய ஷாட்களை ஆடிய போதுதான் அமைந்துள்ளது. ஆகவே நிர்வாகம் அவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் முழு பேட்டிங் சுதந்திரம் அளிக்க வெண்டும், எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது 5ம் நிலையில் நேராக இறங்கி அவர் பிளந்து கட்ட வேண்டியதுதான்.
ஏனெனில் டாப் ஆர்டர் வீரர்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா விராட் கோலி, ராகுல் ஆகியோர் இன்னிங்ஸை மெல்லக் கட்டமைத்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் தோனி மட்டுமே எடுத்த எடுப்பில் அடித்து ஆட முடியும்.
ஆனால் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களான மிட்செல் சாண்ட்னர், அல்லது நேதன் லயன் போன்றவர்கள் வீசும் போது அவர் ஆடமுடியவில்லையே என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர், அதுதான் என்னுடைய பாயிண்ட். பழைய தோனியாக இருந்தால் எந்த ஸ்பின்னராக இருந்தாலும் இறங்கி 2ம் பந்தில் சிக்சர்களை விளாசுவார். அவரால் இன்றும் அது முடியும் சிஎஸ்கே வலைப்பயிற்சிகளில் நான் பார்த்து வருகிறேன், அவரால் இன்றும் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் வரும். பாகிஸ்தானோ, வெஸ்ட் இண்டீஸோ வர முடியாது என்று நான் கூறவரவில்லை. நியூஸிலாந்து அணி உலகக்கோப்பைகளில் சிறப்பாக ஆடும் அணியாகும்” என்றார்.