பங்களாதேஷ் அணியின் கேப்டன் மோர்தசா நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நான் ஆட போகும் கடைசி உலகக் கோப்பை இது தான் என மனம் திறந்துள்ளார்.
மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன . இதற்காக ஒவ்வொரு அணியிலும் தங்களது 15 பேர் கொண்ட குழுவை அறிவித்து விட்டன.
பங்களாதேஷ் அணி உலக கோப்பை தொடருக்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட இருக்கின்றன. அதற்காக, மே 1ம் தேதி அயர்லாந்து செல்கிறது பங்களாதேஷ் அணி. அயர்லாந்து செல்வதற்கு முன்பாக இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் அணியின் கேப்டன் மசாரபி மோர்தசா.

அதில் அவர், இதுவே என் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இதன் பிறகு நான் அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இருக்கிறேன் என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.
35 வயதான பங்களாதேஷ் அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் மசாரபி மோர்தசா, அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2001ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமான மசாரபி மோர்தசா தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஒரு தொடரை கூட இவர் தவற விடவில்லை. அதன் பிறகு இவருக்கு கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
இவரது கேப்டன் பொறுப்பில் பங்களாதேஷ் அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன்முறையாக கால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதி வரை முதல்முறையாக சென்றது.
மேலும் இவரது கேப்டன் பொறுப்பில் தான் வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை முதல்முறையாக வீழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். ஆதலால் இவருக்கு கூடுதல் பொறுப்பும் கிடைத்துள்ளதால் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.