கங்குலி போட்டிக்கு வந்தால், நான் காலி; ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் வீரர் கொடுத்த ஷாக்!
ஐசிசி சேர்மன் போட்டிக்கு கங்குலி வந்தால் எனக்கு டெபாசிட்டை போய்விடும் என்கிற பாணியில் பேசியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டேவ் கேமரான்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் பதவியில் இருந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சாஷங் மனோகர் என்பவர் அண்மையில் தனது பதவிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் போட்டியிடுவதில்லை என தெரிவித்தார். இதனால் ஐசிசி சேர்மன் பொறுப்பில் தற்காலிகமாக மற்றொருவரை அமர்த்திவிட்டு, சேர்மன் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பங்களை கொடுக்கலாம் ஐசிசி தெரிவித்திருந்தது.

ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிட இருந்த பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரரும் போட்டியிடப் போவதில்லை என பின்வாங்கினார். இதற்கு அடுத்ததாக இந்தியாவின் பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி இந்த பதவிக்கு போட்டியிடுவார் என பேச்சுக்கள் அடிபட்டன. இது குறித்த இறுதி முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பும் தெரிவித்து விட்டது.
தற்போதுவரை ஐசிசி சேர்மன் பதவிக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரான் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
கங்குலி போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகள் குறித்து அறிந்த டேவ் கேமரான் கூறுகையில், “என்னையும் கங்குலியையும் ஒப்பிடவே இயலாது. அவர் அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். தற்போது வரை அவர் போட்டியிடவில்லை என தெரிவித்து வந்தாலும், ஒருவேளை அவர் போட்டியிட நேரிட்டால் ஆசிய கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு அதிக அளவில் சப்போர்ட் செய்யும். பிசிசிஐ தலைவராக அவர் வந்த குறைந்த நாட்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒருவேளை அவர் போட்டியிடவில்லை என்றால் இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். பிசிசிஐ தலைவராக அண்மையில் தான் பொறுப்பேற்றார் என்பதால் ஐசிசி சேர்மன் பதவிக்கு அவர் போட்டியிட மாட்டார் என நான் நம்புகிறேன்.” என்றார்.
தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக செயல்பட்டு வரும் அந்த அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்மித், ஐசிசி சேர்மன் பதவிக்கு வந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என முன்னதாக கங்குலி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.