சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் வெளியில் அமர்த்தப்படுவதற்கான காரணம் இதுதான் என ஆஷிஷ் நெக்ரா பேசியுள்ளார்.
2022ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவிற்கு ஒரு கனவு ஆண்டாகவே அமைந்தது. குறிப்பாக டி20 போட்டிகளில் அவர் செலுத்திய ஆதிக்கம் வேறு எந்த வீரரும் செலுத்தவில்லை என்றே கூறலாம். 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.
வேறு எந்தவொரு வீரரும் ஒரு ஆண்டில் இத்தனை சதங்கள் மற்றும் அரை சதங்கள் அடித்ததில்லை. இவரது ஸ்ட்ரைக் ரேட் 187.53 ஆகும். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு அதிரடியாக விளையாடியுள்ளார் என்று. சமகாலத்தில் வீரர்கள் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் சூழலில் சூரியகுமார் யாதவ் அதில் நம்பர் ஒன் வீரராக இருப்பது எளிதான விஷயம் அல்ல.
சமீபத்தில் ஐசிசி இவருக்கு 2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதையும் வழங்கியது. பல சிறந்த டி20 வீரர்கள் மத்தியில் சூரியகுமார் யாதவ் வென்றிருப்பது எளிதல்ல.
டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பார்மில் இருந்ததால், ஒருநாள் போட்டிகளுக்கும் சூரியகுமார் எடுக்கப்பட்டார். ஆனால் பிளேயிங் லெவலில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் நன்றாக விளையாடி வருகிறார். ஐந்தாவது இடத்தில் விளையாடும் கேஎல் ராகுல் கூடுதலாக கீப்பிங் செய்கிறார். ஆகையால் சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை.
இந்நிலையில் சூரியகுமார் யாதவ் விரைவாக ஒருநாள் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார், மற்ற வீரர்கள் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா. அத்துடன் ஏன் இன்னும் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை எடும் தனது கருத்தை கூறியுள்ளார்.
“சூரியகுமார் யாதவை மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரராக பார்க்கிறேன். இவரைப்போன்ற அதிரடியான வீரரின் பார்மை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிகளில் குறைந்த வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வருகிறது. ஏனெனில் புதிதாக ஓடிஐ அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார். உடனடியாக உள்ளே இருக்கும் அனுபவமிக்க வீரரை அனுப்பிவிட்டு இவரை பிளேயிங் லெவனுக்குள் எடுத்து வருவது சரியானதாக இருக்காது.
அதேநேரம் தனது அதிரடியின் மூலம் மற்ற வீரர்களுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளார். மற்ற வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ள, அவர்களும் அதிரடியாக மற்றும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில போட்டிகளில் தவறு செய்தாலே சூரியகுமார் யாதவ் அந்த இடத்தை நிரப்பி விடுவார். டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்று இருக்கிறார். அங்கும் இவரது அதிரடி தொடரும் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடந்து முடிந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் சொந்த காரணங்களுக்காகவும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாகவும் அணியில் இடம்பெறவில்லை. ஆகையால் சூரியகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. இரண்டு போட்டிகளில் விளையாடி 45 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக 31 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.