தினேஷ் கார்த்திக்கிற்கு டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுப்பது பயனற்றது என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 10 பந்துகள் இருக்கும் பொழுது களமிறங்கினாலும் அசால்டாக 20 – 30 ரன்கள் குவித்து கொடுத்து மாஸ் காட்டினார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு கிடைத்த பரிசாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், ஓரளவிற்கு தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
என்னதான் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினாலும், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பையில் அவருக்கான வாய்ப்பு கிடைக்குமா..? வாய்ப்பே கிடைத்தாலும் தற்போதைய இந்திய அணியில் அவருக்கான வேலை என்ன..? என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது. ரிஷப் பண்ட், இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் ஏற்கனவே இந்திய டி.20 அணியில் இருக்கும் பொழுது தினேஷ் கார்த்திக்கையும் எடுப்பது தவறான முடிவாகவே இருக்கும், அது ஆடும் லெவனில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீரும், டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “தினேஷ் கார்த்திக் கடந்த மூன்று மாதங்களாகவே மிக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிக முக்கியமானது, ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னதாக இந்திய அணி எதற்காக அக்ஷர் பட்டேலை களமிறக்கியது என்பது எனக்கு புரியவில்லை. டி.20 உலகக்கோப்பை குறித்து இப்பொழுதே பேசுவது சரியாக இருக்காது. இன்னும் பல மாதங்கள் இருப்பதால் அதுவரை தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதற்காக மட்டுமே ஒரு வீரரை ஆடும் லெவனில் எடுப்பது சரியாக இருக்காது. எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுப்பது இந்திய அணிக்கு பலவீனமாக அமையும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.