நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்திருந்தால் இவர்கள் இருவரையும் உலகக்கோப்பையில் ஆடவைப்பதற்கு இப்போதே முடிவு எடுத்திருப்பேன் என்றார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா.
இந்த வருட ஐபிஎல் சீசன் சில இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விதமாக இருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடும் யஷஷ்வி ஜெய்ஸ்வால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் ரிங்கு சிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் நேஹல் வதேரா மற்றும் திலக் வர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரை கூறலாம்.
ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங் இறங்கி விளையாடும் ஜெய்ஸ்வால் ஒரு சதம், 4 அரைசதங்கள் அடித்து 12 போட்டிகளில் 575 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது சராசரி 52க்கும் மேல் இருக்கிறது.
ரிங்கு சிங், 12 போட்டிகளில் 350 ரன்களுக்கும் மேல் அடித்து, 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். மும்பை வீரர் திலக் வர்மா கடைசி சில போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் முதல் எட்டு போட்டிகளில் இவர் ஏற்படுத்திய தாக்கம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றியமையாததாக இருந்தது. இவரும் 8 போட்டிகளில் கிட்டத்தட்ட 250 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் மூன்று அரைசதங்களும் அடங்கும்.
இப்படி இளம் வீரர்கள் பலர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் தருவாயில், ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவரையும் இந்த வருட உலகக்கோப்பை அணியில் எடுக்க வேண்டும்; நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்திருந்தால் அதை உடனடியாக செய்து இருப்பேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
அவர் பேசியதாவது:
“நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்திருந்தால் உடனடியாக ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவரையும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு எடுத்திருப்பேன். இருவரும் இந்திய அணிக்காக விரைவில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஜெய்ஸ்வால் துடிப்பான மனநிலையில் இருக்கிறார். ஆக்ரோசத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஓப்பனிங்கில் இறங்கி இப்படி விளையாடுவது எனக்கு சேவாக்கை நினைவுபடுத்துகிறது. ஜெய்ஸ்வால் விளையாடும் விதத்தை ரோகித் சர்மா பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட வீரர் அணிக்கு தேவை என்று தேடிக்கொண்டிருப்பார் என்றும் நினைக்கிறேன்.” என சுரேஷ் ரெய்னா பேசினார்.
ரிங்கு சிங் பற்றி பேசிய ரெய்னா, “பினிஷிங் ரோலில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடர்களில் அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த சூழ்நிலைகளை நன்றாக கையாண்டு வெற்றிகளை பெற்றுத்தந்து வருகிறார் ரிங்கு சிங். அவரைப் போன்ற இளம்வீரரை விரைவாக இந்திய அணிக்கு விளையாட வைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.