இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஏன் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பிகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்தை தெரிவித்துள்ளார்
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி, சில நாட்களுக்கு முன் டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி.20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக விராட் கோலி அறிவித்துவிட்டார்.

மேலும் தான் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் என்பதை அதிக முறை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போதும், சமூக வலைதளங்களிலும் அதிகமாகவே விராட் கோலி விளக்கம் அளித்திருந்தாலும், இன்னும் அவர் தெளிவான காரணத்தை விளக்கவில்லை என்றும் தேவையில்லாத சர்ச்சை கருத்துக்களையும் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நான் பலமுறை ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் என்று விளக்கம் அளித்து விட்டேன் ஆனால் இன்னும் அதையே போட்டு கிளறிக் கொண்டிருக்கிறார்கள்,இது ஏன் என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை, நான் எந்த ஒரு விஷயத்தையும் மூடிமறைக்கும் நபர் கிடையாது உள்ளதை உள்ளபடி மிகவும் நேர்மையாக தெரிவித்துவிட்டேன். இப்படி தேவையில்லாத கேள்விகளை எழுப்புவது மிகவும் வேதனையாக உள்ளது என்று விராட் கோலி தனது நிலை குறித்து வெட்டவெளிச்சமாக தெரிவித்துவிட்டார்.

மேலும் பேசிய அவர், இந்த உலகக் கோப்பை தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது மட்டுமே இந்திய அணியின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் விராட்கோலி தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சௌரவ் கங்குலி, விராட் கோலி ஓய்வு அறிவித்தது ஆச்சரியமாக உள்ளதாகவும், மேலும் பிசிசிஐ எந்த ஒரு நெருக்கடியையும் விராட் கோலிக்கு கொடுக்கவில்லை என்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.