இந்திய பவுலர்களிடம் இருந்து என்ன தப்பு நடக்கக்கூடாதுன்னு நினைத்தேனோ, துரதிஷ்டவசமாக அதையே செய்துவிட்டார்கள் என ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் களமிறங்கினர்.
ரோகித் சர்மா 38 பந்துகளில் 34 ரன்கள் அடித்து நன்றாக துவக்கம் அமைத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி(8) மற்றும் இசான் கிஷன்(5) இருவரும் சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுக்கும், பாண்டியா 28 ரன்களுக்கும் அவுட் ஆகினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்துவர, மறுமுனையில் அபரமாக விளையாடி வந்த சுப்மன் கில் சதம் விளாசிய பின் அதிரடியாக ஆடத்துவங்கினார். கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த கில், இரட்டை சதம் அடித்து பல சாதனைகளை படைத்தார்.
சுப்மன் கில், 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் அடித்தது.
மிகப்பெரிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் வரிசையாக விக்கெட்டுகள் சரியத்துவங்கின. 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணியை மிட்ச்சல் சான்ட்னர் மற்றும் மைக்கல் பிரெஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்து மீட்டனர்.
மைக்கல் பிரெஸ்வெல், இந்திய பவுலர்களை தவிடுபொடியாக்கி 57 பந்துகளில் சதம் விளாசினார். இறுதிவரை போராடிய அவர் 78 பந்துகளில் 140 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 337 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
போட்டி முடிந்த பிறகு பேசிய ரோகித் சர்மா கூறுகையில், “வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், பிரெஸ்வெல் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தையும் தெளிவாக அடித்தார். எங்களுக்கு தெரியும், எங்களது பவுலர்கள் தவறான பந்துகளை வீசாத வரை ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். துரதிஷ்டவசமாக மிடில் ஓவர்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டோம்.
இன்றைய போட்டியில் கில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இலங்கை தொடருக்கு முன்பும் சிறந்த பார்மில் இருந்தார். அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்துதான், அந்த தொடரில் வெளியில் அமர்த்தாமல் தொடர்ந்து விளையாட வைத்தோம். இன்றைய போட்டியில் அவர் அனையசமாக விளையாடினார்
அதேபோல் பந்துவீச்சில் சிராஜ் அபாரமாக செயல்பட்டார். டி20, டெஸ்ட், தற்போது ஒருநாள் போட்டிகளில் கட்டுப்பாடோடு பந்துவீசி வருகிறார். அவரிடம் நிறைய பிளான்கள் இருக்கிறது. அதை நன்றாக செயல்படுத்துவதால் வெற்றிகரமானதாக இருக்கிறார்.” என ரோகித் சர்மா பேசினார்.