என்ன வேணாலும் பிளான் பன்னிக்கங்க… நான் ரெடியா தான் இருக்கேன்; இந்திய அணியை எச்சரித்த டாம் கார்ட்லி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராக இருப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர நாயகனான டாம் கார்ட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினாலும், இங்கிலாந்து வீரர்கள் பயம் இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும், அறிமுக வீரராக களமிறங்கிய டாம் கார்ட்லி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை மாற்றி கொடுத்ததாலும் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 2ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்காக தான் தயாருடன் இருப்பதாக முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற டாம் கார்ட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாம் கார்ட்லி பேசுகையில், “சுழற்பந்து வீச்சாளர்கள் சில நேரங்களில் விக்கெட்டை கைப்பற்றி கொடுப்பதும், சில அதிகமான ரன்கள் விட்டு கொடுப்பதும் சகஜம் தான். அடுத்த போட்டிக்காக நான் தயாராகவே உள்ளேன். இந்திய அணி எனக்கு எதிரான திட்டங்களுடன் வரும் என்பது தெரியும். இந்திய அணியோ அல்லது, தனிப்பட்டு வீரர்களோ என்னை குறி வைத்து விளையாடினாலும் நான் அதை பற்றி கவலைப்பட போவது இல்லை. நான் முதல் முறையாக இந்தியா வந்துள்ளதால் நிறைய விசயங்களை தற்போது தான் கற்று வருகிறேன். எனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள கடுமையாக முயற்சித்தும் வருகிறேன்” என்று தெரிவித்தார்.