”‘நான் இன்னும் முடிந்துவிடவில்லை, தென் ஆப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல என்னாலான பங்களிப்பைச் செய்ய முடியும்”
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் தான் இயன்றவரை பாகிஸ்தானுக்கு ஆடவே முயற்சி செய்ததாகவும் ஆனால் தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இம்ரான் தாஹிர் லாகூரில் பிறந்தவர். பாகிஸ்தானில் நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளார். பிற்பாடு தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று ஆடினார்.
தான் பாகிஸ்தானுக்கு ஆட முடியாமல் போனதை நினைத்து இம்ரான் தாஹிர் ஏமாற்றமடைந்துள்ளார்.
ஜியோ சூப்பர் செய்திக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் பாகிஸ்தான் லாகூரில் நிறைய ஆடியிருக்கிறேன். பெரும்பாலான என் கிரிக்கெட்டை பாகிஸ்தானில்தான் ஆடினேன். ஆனால் பாகிஸ்தானுக்கு ஆட வாய்ப்பு கிட்டவில்லை, இது எனக்கு பெரிய ஏமாற்றம்தான்.
நான் மக்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னால் முடிந்த அளவு பாகிஸ்தானுக்குத்தான் ஆட விரும்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் என் கனவுகள் பூர்த்தியடைய வாய்ப்பளித்தது.

இதற்காக நான் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஒரு முறை தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடிவிட்டேன் என்றால் நான் தென் ஆப்பிரிக்கர்தான், என்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் முன் இம்ரான் தாஹிர் பாகிஸ்தான் யு-19 அணி, பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு ஆடியுள்ளார்.
இந்நிலையில் அவர் மேலும் கூறும்போது, ‘நான் இன்னும் முடிந்துவிடவில்லை, தென் ஆப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல என்னாலான பங்களிப்பைச் செய்ய முடியும், இன்னும் நான் பங்களிக்க முடியும் என்று தேர்வாளர்கள் கருதினால் நான் தயாராகவே இருக்கிறேன்’ என்றார் இம்ரான் தாஹிர்.