ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எடுக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272/8 ரன்கள் அடித்தது. 273 ரன்கள் இலக்கை 35 ஓவர்களில் சேஸ் செய்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியும் பெற்றது. போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு சதம் விளாசினார். பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.
சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்திருந்த போதும் அணியின் பிளேயிங் லெவன் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததோடு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
பிளேயிங் லெவனில் அஸ்வின் மற்றும் முகமது சமி இருவரும் எடுக்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்ததாவது:
“அஸ்வின் என்ன தவறு செய்தார்? ஏன் அவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை? இது போன்ற போட்டிகளில் வேலைகளை எளிதாக்கி இருப்பார். அதேபோல் முகமது சமிய ஏன் எடுக்கப்படவில்லை?. கடந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சமி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார். இதுபோன்று ஒரு அணிக்கு எதிராக குறிப்பிட்ட சில வீரர்கள் நன்றாக செயல்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை வெளியில் அமர்த்தாமல் அணிக்குள் எடுத்து விளையாட வைக்க வேண்டும். திட்டமிடல் எதுவும் இன்றி பிளேயிங் லெவனை மாற்றிக் கொண்டே இருப்பது சரியல்ல.
ரோகித் சர்மா பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டார். இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இதெல்லாம் வைத்து மட்டுமே அணியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியாகிவிடாது. சரியான பிளேயிங் லெவன் மற்றும் அவர்களுக்கு என்ன ரோல் என்பதை தெளிவுபடுத்தி விட வேண்டும். அது இந்திய அணியில் நடைபெற்று வருகிறதா என்றால் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சு உரிய தரத்தில் இல்லை என்பதை எனது கருத்து. அடுத்தடுத்து வரும் அணிகளுக்கு எதிராக இது போன்ற தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொண்டால் சிக்கல் இன்றி செயல்படலாம்.” என்றார்.