உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த பேட் கம்மின்ஸ்-இன் தாயார் இன்று காலை மரணித்துள்ளார். இதற்கு இரு அணி நிர்வாகமும் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி., அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கம்மின்ஸ் அணியை வழிநடத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு பறந்து சென்றார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் வந்துவிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவரால் அதற்குள் வர முடியவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று ஆடினார்.
பேட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாலும் பேட் கம்மின்ஸ் பார்க்க சென்றுள்ளார் என கூறப்பட்டது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் அவரால் வர முடியவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து வந்தார்.
இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார் என தெரியவந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு சமீபகாலமாக பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. இதற்காக முழுநேரமும் மருத்துவமனையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த சூழலில் உயிர் இழந்திருப்பது ஆஸ்திரேலிய அணி மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்று ஆஸ்திரேலியா அணியினர் கருப்பு நிற பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தும் விதமாக விளையாடுகின்றனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “மரியா கம்மின்ஸ் இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். ஆஸ்திரேலிய அணியின் சார்பாக மனமார்ந்த வருத்தத்தை பேட் கம்மின்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இன்று ஆஸ்திரேலியா அணியினர் தனது கையில் கருப்பு நிற பட்டை அணிந்து மரியாதை செலுத்தும் விதமாக விளையாடுவோம்.” என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும் இந்திய அணி தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியில், “இந்தியாவின் சார்பாக பேட் கம்மின்ஸ் தாயார் இறப்பிற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது பிரார்த்தனை மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் பேட் கம்மின்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த கடினமான தருணத்தில் சமர்ப்பித்து கொள்கிறோம்.” என்று வெளியிட்டிருந்தது.
நான்காவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் வருகிற 17ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க உள்ளது. அதற்குள் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியுடன் இணைவார் என்ற தகவல்களும் அணியின் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.