விராட் கோலி 35-40 ரன்கள் அடித்தவுடன் ஒரு தவறான சாட்டை விளையாடுகிறார். ஒரு சில நேரங்களில் அது அவுட்டில் முடிகிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்து வரும் பேட்ஸ்மேன் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டரை மூன்று வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியாமல் திணறி வந்தார். வரிசையாக சதம் அடிப்பதற்கு பெயர் போன இவர் இப்படி தொடர்ந்து சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து வந்ததால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை பெற்றனர்.
பின்னர் 2022 ஆசியகோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டி20 சதத்தை அடித்து தனது நீண்ட சதம் வறட்சியை சரி செய்தார். அதன் பிறகு டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம், கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மூன்றுவித போட்டிகளிலும் சதத்தை அடித்து வறட்சியை தீர்த்துக் கொண்டார்.
இதனை விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ், விராட் கோலி 2.0 என்று பலரும் பல பெயர்களில் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது பழைய விராட் கோலி இல்லை, முன்பு போல் அவர் பேட்டிங் செய்திருந்தால் விராட் கோலிக்கு இந்த பிரச்சனை இருக்காது. தொடர்ந்து சில தவறுகளை செய்து வருகிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க வீரர் வாசிம் ஜாபர்.
“இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி நன்றாக பேட்டிங் செய்து வந்தார். மைதானம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாகவே இருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலுடன் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கொரை மேலே எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தேன். எல்லிஸ் பந்தில் அவுட் ஆகிவிட்டார். அவரது பந்துவீச்சை அதிகளவில் எதிர்கொள்ளாததால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம்.
எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக விராட் கோலி 35-40 ரன்கள் அடித்திருந்தால் அதை மிகப்பெரிய ஸ்கோர் ஆக மாற்றக்கூடியவர். ஆனால் சமீப காலமாக அடிக்கடி 30-40 ரன்களில் இருக்கும்பொழுது ஆட்டமிழந்து வருகிறார். குறிப்பாக விசாகப்பட்டினம் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த மைதானம். அங்கு மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருக்கலாம். அதை தவற விட்டுவிட்டார். அடிக்கடி இதுபோன்று 40 ரன்கள் இருக்கையில் ஒரு தவறான சாட்டை விராட் கோலி விளையாடி வருகிறார். இது அவரது பழைய ஆட்டம் இல்லை.” என சுட்டிக்காட்டினார்.