அவருக்கான வாய்ப்பு மட்டும் எப்பொழுதும் மறுக்கப்படுகிறது ; குல்தீப் யாதவ் நீக்கம் குறித்து இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர்..
குல்திப் யாதவின் நிலையை நினைத்து நான் கண்கலங்கி விட்டேன் என குல்திப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக நீண்ட நாட்கள் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த குல்தீப் யாதவ், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரராக இருந்தார்.மேலும் அந்த போட்டியின் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டத்தையும் பெற்று அசத்தினார். ஆனால் இவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
முதல் போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டம் வென்ற குல்தீப் யாதவை அணியிலிருந்து நீக்கியது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட மிகப்பெரும் ஜாம்பவான்களே இந்திய அணியை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில்,இந்திய அணி வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளதால் அதில் குல்தீப் யாதவ் இடம் பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையில், இந்திய அணியில் விளையாடுவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் குல்திப் யாதவிற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது என குல்தீப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே இந்திய அணியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில் பாண்டே தெரிவித்ததாவது, “குல்தீப் யாதவ் அதிகமாகவே பொறுமையாக இருந்துள்ளார். அவரை நினைத்து நான் அதிகம் வருத்தப்படுகிறேன், அவருக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. அவர் ஒரு நாள் தொடரில் இரண்டு ஹாட்டிரிக்களை பதிவு செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரிலும் இந்திய ஏ அணி விளையாடிய போதும் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வென்ற குல்தீப் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டதை என்னால் எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. நான் அப்பொழுது அவரை நினைத்து கண் கலங்கினேன். ஆனால் குல்தீப் யாதவ் என்னிடம் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் கடின முயற்சி செய்தால் நமக்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். இதுவே அவர் எவ்வளவு பக்குவமாக உள்ளார் என்பதை நமக்கு காட்டுகிறது” என குல்திப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.