ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.
டி.20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்க இருப்பதால், அனைத்து அணிகளும் தங்களது அணிகளை தயார்படுத்தும் விதமாக இருதரப்பு டி.20 தொடர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதில் ஒரு பகுதியாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. 20,23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரு அணிகள் இடையேயான டி.20 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை (20-9-22) நடைபெற இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுலே களமிறங்குவார்கள் என தெரிகிறது. ஆசிய கோப்பை தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாத கே.எல் ராகுல் இந்த தொடரில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. ரிஷப் பண்ட்டிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. அக்ஷர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறுவார். வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமாருடன், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ராஹ் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ராஹ், ஹர்சல் பட்டேல்.