முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில், அவருக்கு பதிலாக யார் ஓப்பனிங் செய்வார்கள்? என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக முடிந்திருக்கிறது. இதில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. 2017 முதல் தற்போது 2023 வரை தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று வரலாறு படைத்திருக்கிறது.
டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முதல் போட்டி 17ஆம் தேதி மும்பை மைதானத்திலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 19 மற்றும் 22ஆம் தேதிகளில் விசாகப்பட்டினம் மற்றும் சென்னை மைதானங்களில் முறையை நடக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. இதனால் முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.
ரோகித் சர்மா இல்லாத நேரத்தில், யார் ஓப்பனிங் பேட்டிங் இறங்குவார்? இந்திய அணி எத்தகைய அணுகுமுறையுடன் களமிறங்க உள்ளது? என்பது பற்றி தனது சமீபத்திய பேட்டிகள் பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா. அவர் தனது பேட்டியில்,
“சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஓபனிங் இறங்குவர். இந்த மைதானம் பலவருடங்களாக எப்படி இருந்ததோ, இப்போதும் மாறாமல் இருக்கிறது. இந்த பிட்சில் 7 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ளேன். விக்கெட் இரண்டு அணிகளுக்கும் சாதகமாக இருக்கிறது. ஆகையால் போட்டியின் கடைசி வரை கவனத்துடன் இருக்க வேண்டும்.” என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவீர்களா? என்று கேட்டதற்கு “அதற்காக துளியும் நான் உழைக்கவில்லை. ஒரு சதவீதம் கூட எனது உழைப்பை கொடுக்காத நான் எப்படி அணியில் இருக்க முடியும். நிச்சயம் நான் பைனலில் விளையாடவில்லை. மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு வரவேண்டும் என்றால், அதற்காக கடின உழைப்பை கொடுத்து எனது இடத்தை பெறுவேன்.” என்றும் ஹர்திக் பாண்டியா கூறினார்.