ஐபிஎல் தொடருக்கு தான் வருவாரு போல… மீண்டும் விலகும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்; வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முற்றிலுமாக விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் தவிக்கிறார். ஆசியகோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் என இரண்டிலும் அவரால் விளையாட முடியவில்லை.இதனால் இந்திய அணி பந்துவீச்சில் எப்படி தடுமாறியது என்பதை அனைவருமே கண்டோம்.
பும்ரா இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணி பல்வேறு வீரர்களை பயன்படுத்தி வருகிறது. உம்ரான் மாலிக், குல்தீப் சென், தீபக் சகர், ஆவேஷ் கான் என பலரும் அந்த இடத்திற்கு வந்து சென்று விட்டனர். தற்போது வரை பும்ரா இல்லாமல் இந்திய அணி பின்னடைவில் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் பும்ரா பரிபூரண குணமாகிவிட்டார் என்றும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கி விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் இன்னும் பறிபூரண குணமாகவில்லை என்றும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் அவர் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தற்பொழுது பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பும்ரா பந்து வீசத் துவங்கி விட்டாலும், அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதற்கான திட்டம் இருப்பதாக தெரியவில்லை என்று கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.
பும்ரா குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகாத நிலையில் இப்படி பும்ரா குறித்து ஆங்காங்கே பேசப்பட்டு வருவதால் இது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாத பொருளாகியுள்ளது, ஒருவேளை பும்ரா மட்டும் காயத்திலிருந்து குணமடையவில்லை என்றால் இது எதிர்வரும் போட்டிகளில் இந்தியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.