கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடரஜானுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரில் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் இளம் வீரர்களுக்கே இந்த தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகிறது, இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் மிக சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் தமிழக வீரரான நடராஜன் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி எதிரணிகளை மிரளவிட்டார், தனது துல்லியமான யார்கர் பந்துவீச்சின் மூலம் டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் ஸ்டெம்பையை பிடுங்கி எறிந்த நடராஜன் இந்த ஒரே தொடரில் யார்கர் கிங் என்ற பட்டத்தையும் ரசிகர்களிடம் பெற்றுவிட்டார், ரபாடா போன்ற உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு நடராஜன் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார்.
லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது அஷ்வினுடனான யூடியூப் நேர்காணலில் ‘இந்தியா ஆடணும்ங்கிறது என் கனவு’ எனவும் நடராஜன் சொல்லியிருந்தார்.

இப்போது அவரது கனவு நிஜமாகியுள்ளது. முதலில் பேக் அப் பவுலராக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்பட்ட அவர் வருண் சக்கரவர்த்தி காயம்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் கலக்க உள்ளார் அவர். இந்திய ஜெர்ஸியில் அவர் விளையாடுவதை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர். இதனை தங்களது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.