இந்திய அணியை பற்றி பேசிய வாயெல்லாம் விரைவில் மூடப்போகிறது. அடுத்த ஆறு மாதத்தில் இந்திய அணி இரண்டு கோப்பைகளை தட்டிச்செல்லும் என்று உறுதிப்பட பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் இழந்தது. கடைசியாக இந்திய மண்ணில், 2019ஆம் ஆண்டு இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது.
அதன்பிறகு தொடர்ச்சியாக 26 இருதரப்பு ஒருநாள் தொடர்களை இந்திய அணி இந்திய மண்ணில் வென்று வரலாறு படைத்திருந்தது. இத்தகைய தொடர்ச்சியான வெற்றியை மீண்டும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இழந்திருக்கிறது.
இதனால் இந்திய அணியையும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டிராவிட் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியவில்லை. இதில் எப்படி இந்த வருடம் உலககோப்பையை ஆஸ்திரேலியா அணி உட்பட பலமிக்க அணிகளை வீழ்த்தி இந்திய அணி வெல்லும் என்று நாம் கனவு காண்கிறோம் என்று விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ரவி சாஸ்திரியிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில் புதிய புத்துணர்வை கொடுத்திருக்கிறது.
“தற்போது இருக்கும் இந்திய அணியில் இளம் மற்றும் மூத்த வீரர்கள் என பேட்டிங், பௌலிங் இரண்டிலும் கலவையாக இருக்கின்றனர். பேட்டிங்கில் ஷுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இளம் மற்றும் அனுபவமிக்க வீரர்கள் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் சிராஜ், உம்ரான் மாலிக், சமி போன்ற அனுபவம் மிக்க மற்றும் இளமையான வீரர்கள் இருக்கின்றனர். அடுத்ததாக வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை இரண்டையும் இந்த அணி நிச்சயம் வெற்றி பெற்று பேசிய வாய்கள் அனைத்தையும் மூட வைக்கும்.” என்று அதீத நம்பிக்கையுடன் பேட்டி அளித்தார்.