இலங்கையை வீழ்த்தி, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற உதவிய நியூசிலாந்து அணிக்கு நன்றி கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஒருவேளை, நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது.
அதாவது, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இலங்கை அணி முன்னேறிவிடலாம். இந்திய அணி வெளியேற்றப்படலாம் என்ற ஒரு சிக்கல் இருந்தது.
ஒருபக்கம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருந்ததால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மறுபக்கம் துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இது இந்திய அணிக்கு இன்னும் தலைவலியை கொடுத்தது. இறுதியில் நியூசிலாந்து அணி ஐந்தாம் நாளில், கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
வழக்கமாக ஐசிசி போட்டிகளில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதினால் அதிக முறை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் முறையாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு நியூசிலாந்து உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட். அவர் பேசியதாவது:
“முதல் நாள் ஆட்டத்தின் போது நான் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச்சை பார்த்தேன். டாஸ் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்று எண்ணினேன். துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணியினர் டாசை வென்று முதல் இரண்டு நாட்களும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். ஆகையால் இலங்கை நியூசிலாந்து அணிகளின் ஆட்டத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
நம்பிக்கையுடன் இலங்கை அணி வெற்றி பெறாது என்று எதிர்பார்த்தோம். ஆனால் இலங்கை அணி அபாரமாக விளையாடியது. போட்டியின் கடைசி நாள் வரை எடுத்துச்சென்று நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. வழக்கமாக ஐசிசி நாக்அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணி இந்தியாவை அதிக முறை வெளியேற்றியுள்ளது. முதல்முறையாக இந்த சிறிய சப்போர்ட் நியூசிலாந்து அணியிடமிருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதற்கும் அவர்களுக்கு நன்றியை கூறிக் கொள்கிறேன்.” என்று சிரித்தபடி சொன்னார்.