இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பேனா? மாட்டேனா? என்ற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார் ஹார்திக் பாண்டியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இறுதியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியும் பெற்றது. அதன்பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
வருகிற 17-ஆம் தேதி துவங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆகையால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாட உள்ளார். ஆகையால் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் விளையாடுவீர்களா? மாட்டீர்களா? ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருப்பீர்களா? என்கிற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த அவர்,
“நான் டெஸ்ட் போட்டிகளை பற்றி எதுவும் நினைக்கவில்லை. அதற்காக உழைக்கவும் இல்லை. உண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற விட வேண்டும் என்பதற்காக 10% கூட உழைப்பை கொடுக்கவில்லை. அப்படியிருக்க, நான் எவ்வாறு உலக பெஸ்ட் சாம்பியன்ஸ் பைனலில் விளையாடுவது சரியாக இருக்கும். முதலில் எதைவைத்து எடுப்பார்கள். ஆகையால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இல்லை.
நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்பினால், அதற்கான கடின உழைப்பை கொடுத்து எனது இடத்தைப் பெறுவேன். அதைப் பற்றி இப்போது நான் யோசிக்கவில்லை. டெஸ்டில் விளையாடுவதற்கு, நான் எனது முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று உணர்ந்தால் அதற்காக வேலைகளை செய்வேன்.” என்றார்.
ஹர்திக் பாண்டியா 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். 2018 ஆம் ஆண்டு வரை 10+ டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பின்னர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.