உங்கள கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுனாலும் தப்பு இல்லடா… இந்திய அணி மீது சுனில் கவாஸ்கர் கடும் கோவம்; காரணம் என்ன..?
வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் குல்தீப் யாதவிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஜெயதேவ் உனாத்கட்டிற்கு இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெயதேவ் உனாத்கட் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர் தான் என்றாலும், வங்கதேச அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி பேட்டிங்கிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து இதன் மூலம் ஆட்டநாயகன் விருதும் வென்ற குல்தீப் யாதவை, ஆடும் லெவனில் இருந்து நீக்கியது ஏன் என முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரும், குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இருந்து நீக்கிய இந்திய அணியின் முடிவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ஆட்டநாயகன் விருது வென்றவர் அடுத்த போட்டியிலேயே ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. நம்ப முடியவில்லை என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்காது, இந்திய அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது. கடும் வார்த்தைகளை உபயோகித்து எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என தோன்றுகிறது. 20 விக்கெட்டுகளில் 8 விக்கெட் வீழ்த்திய ஒருவரை எப்படி ஆடும் லெவனில் இருந்து நீக்குகிறார்கள் என தெரியவில்லை. குல்தீப் யாதவ் நிச்சயம் ஆடும் லெவனில் இடம்பெற்றிருக்க வேண்டும், யாருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் குல்தீப் யாதவிற்கு நிச்சயம் இடம் கிடைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.