காட்டடி… தனி ஆளாக இந்திய பந்துவீச்சாளர்களை கதறவிடும் பென் டக்கட்; வலுவான நிலையில் இங்கிலாந்து அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
15ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரெஹன் அஹமத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ஜாக் கிராவ்லே 15 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஓலி போப் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஓலி போப் மற்றும் ஜாக் கிராவ்லே ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், இங்கிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரரான பென் டக்கட் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து மளமளவென ரன் குவித்து வருகிறார். 88 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்த பென் டக்கட் இதுவரை மொத்தமாக 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து கொடுத்திருப்பதன் மூலம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 207 ரன்கள் குவித்துள்ளது.