இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான ஆர்.பி சிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் இரண்டாவது போட்டியில், பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டதால் 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
முதல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணி, இரண்டாவது போட்டியில் அதற்கு நேர் எதிராக விளையாடி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் படுதோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி சிங்கும் இந்திய அணியின் படுதோல்வி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஆர்.பி சிங் பேசுகையில், “இந்திய வீரர்கள் முதலில் தங்களது மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிகளில் எதற்காக அதிரடியாக விளையாட வேண்டும். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினால் எந்த பயனும் ஏற்படாது. தேவையற்ற ஷாட்கள் அடித்து அதன் மூலம் ரன்கள் குவிப்பதை விட இறுதி வரை களத்தில் இருப்பதே முக்கியமானது. இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களால் பெரிதாக பேட்டிங் செய்ய முடியாது, அவர்களால் நீண்ட நேரம் விக்கெட்டை இழக்காமல் தாக்குபிடிக்க முடியாது, எனவே பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணரந்து விளையாட வேண்டும். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடினால் மட்டுமே மூன்றாவது போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்தார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.