2011ல் யுவராஜ் சிங் செய்த வேலையை இந்த முறை செய்து கொடுக்க போவது இவர் தான்; ஹர்பஜன் சிங் உறுதி
கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் செய்து கொடுத்த வேலையை, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி செய்து கொடுப்பார் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஐந்து அணிகளை எதிர்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் விராட் கோலியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து நடப்பு தொடரில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங்கும் விராட் கோலியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் வலுவான அணியாக உள்ளது. இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த பல வீரர்கள் உள்ளனர். கடந்த 2011ம்ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யுவராஜ் சிங்கின் இடத்தில் வேறு ஒருவரை வைத்து பார்ப்பது சரியாக இருக்காது. ஆனால் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றால் அதற்கு விராட் கோலி சரியான நபராக இருப்பார். கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததை போன்று, 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் விராட் கோலி இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.