கிரிக்கெட்னா உங்களுக்கு சாதாரணமா போச்சா..இந்திய அணி வீரர்களுக்கு ஏற்படும் காயம் குறித்து எச்சரித்த கபில் தேவ்..
இந்திய அணி வீரர்கள் காயமடைவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
ஒரு அணி வெற்றி பெற வேண்டுமென்றால் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதைவிட அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் உடற் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது அனைவராலும் ஏற்கக்கூடிய விஷயமாகும்.
ஆனால் இந்திய அணியை பொறுத்தவரையில் சிறப்பாக செயல்பட்டாலும் முக்கியமான கட்டத்தில் நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்படுவதால் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது. குறிப்பாக நடந்து முடிந்த ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடர் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
ஒரு வீரர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக அவரை மூன்று விதமான தொடரிலும் விளையாட வைத்து அவருடைய கிரிக்கெட் கரியரை முடித்து வைக்கும் வழக்கத்தை இந்திய அணி வைத்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திரங்களான பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் செயல்பட்டதால் அவர்களால் உடற்தகுதியை மெயின்டைன் செய்ய முடியாமல் காயம் ஏற்பட்டு தற்பொழுது ஓய்வில் உள்ளனர்.
மகேந்திரசிங் தோனி அல்லது அவருக்கு முன்பு இருந்த வீரர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது சமகால கிரிக்கெட்டில் அதிக காயங்கள் ஏற்படுவது ஏன் என்று தெரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டு வருவதால் வீரர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்று ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வீரர்களை பிசிசிஐ விளையாட வைத்து வருகிறது. ஆனால் அப்படி செய்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்து என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருவதோடு வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க பிசிசிஐக்கு அறிவுரையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ்., இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் காயம் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில் தேவ் தெரிவிக்கையில், “உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளது, இந்த காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ அவ்வளவு அதிகமாக காயம் அடைவார்கள். கிரிக்கெட் என்பது மிகவும் எளிதான விளையாட்டு கிடையாது, இந்த விளையாட்டில் அனைத்து தசைகளையும் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும், மேலும் கடினமான மைதானத்தில் விளையாடவேண்டிய நிலை இருக்கும், சீதோசன நிலையையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கும். இதற்கு ஏற்றார் போல் நம்முடைய உடம்பை தயார் செய்து கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் நிச்சயம் காயம் ஏற்பட்டுவிடும்”.
சமகால கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் எளிதாகவே காயம் அடைந்து விடுகின்றனர். இதற்கான தீர்வு வலைப்பெயர்ச்சியின் போது அதிகமான ஓவர்களை பந்துவீசி பழக வேண்டும், அப்பொழுதுதான் நம்முடைய தசை அதற்கு ஏற்றார் போல் செயல்படும். ஆனால் தற்போதைய நிலையில் வலை பயிற்சியின்பொழுது வேகப்பந்துவீச்சாளர்கள் வெறும் ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசுகின்றனர், இதனால் அவர்களால் சர்வதேச அளவில் அதிக நெருக்கடியை தாங்க முடியாமல் காயத்தை உண்டாக்கி கொள்கிறார்கள்” என்று கபில் தேவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.