இந்திய அணியுடனான நியூசிலாந்து அணியின் படுதோல்விக்கு இந்த இரண்டு விசயங்கள் தான் காரணம்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான சைமன் டவுல் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 21வது போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத இரு அணிகள் இடையேயான இந்த போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி 95 ரன்களும், ரோஹித் சர்மா 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 48வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் வலுவான அணிகளின் முதல் அணியாக பார்கப்பட்ட நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பெருளாக மாறியுள்ளதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் நியூசிலாந்து அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான சைமன் டவுல், நியூசிலாந்து அணியின் தோல்விக்கான இரண்டு முக்கிய காரணங்களையும் சுட்டி காட்டியுள்ளார்.
இது குறித்து சைமன் டவுல் பேசுகையில், “இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டியின் போது ஏற்பட்ட இரண்டு திருப்புமுனைகளை நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். முதலாவதாக நியூசிலாந்து அணி பேட்டிங்கின் போது கடைசி 10 ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நியூசிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி கடைசி 10 ஓவர்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் நிச்சயமாக 300-320 ரன்களை கடந்திருக்கும். அதே போன்று இரண்டாவதாக கிளன் பிலிப்ஸின் விக்கெட்டும் ஒரு திருப்புமுனையாகவே நான் பார்க்கிறேன். கிளன் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா பிடித்தவிதம் அபாரமானது. கிளன் பிலிப்ஸின் கேட்சை ஒருவேளை இந்திய அணி தவறவிட்டிருந்தால் அது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும்” என்று தெரிவித்தார்.