நான் யாரு.. என்னால் என்ன செய்ய முடியும்னு எல்லாருக்கும் தெரியும்; இந்திய அணிக்கு எதிராக நான் வைத்திருக்கு ஒரே ஒரு திட்டம் இது தான்; ஷாகின் அப்ரிடி ஓபன் டாக்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த தான் வைத்திருக்கும் திட்டம் குறித்து ஷாகின் அப்ரிடி ஓபனாக பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று (செப்-2) நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியுடனான போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரரான ஷாகின் அப்ரிடி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வைத்திருக்கும் திட்டங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
இது குறித்து ஷாகின் அப்ரிடி பேசுகையில், “இந்திய அணிக்கு எதிரான போட்டிக்காக நான் வைத்திருக்கும் திட்டம் சாதரணமானது தான். இந்தியா மட்டுமல்ல அனைத்து அணிகளின் துவக்க வீரர்களுக்கும் என திட்டங்கள் பற்றி தெரியும். துவக்க வீரர்களின் விக்கெட்டை முடிந்தவரை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பதே எனது திட்டம், அது தான் எனது வேலையும். துவக்க வீரர்களின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றிவிட்டால் அடுத்தடுத்து வரும் வீரர்கள் மீது அதிக அழுத்தம் தானாகவே ஏற்பட்டு விடும். அதே போன்று புதிய பந்தை எதிர்கொள்வது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். துவக்க வீரர்களை போன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் புதிய பந்தை இலகுவாக எதிர்கொள்ள முடியாது, அவர்களுக்கு அதில் பெரிய அணுபவமும் இருக்காது. எனவே துவக்க வீரர்களின் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவதில் முழு கவனத்தையும் செலுத்துவோம்” என்று தெரிவித்தார்.