தனது ஆட்டத்தில் கேஎல் ராகுல் செய்த சிறுசிறு மாற்றங்களே தற்போது மிகப்பெரிய அளவில் அவருக்கு உதவுகிறது என்று தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
நடைபெற்றுவரும் தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. மயங்க் அகர்வால் 60 ரன்களுக்கும், கேப்டன் விராட் கோலி 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

துவக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் மிகவும் நிதானத்துடன் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, தனது 7வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். தென்ஆப்பிரிக்க மைதானத்தில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசி வரலாறு படைத்தார். ஆசிய கண்டங்களுக்கு வெளியே கேஎல் ராகுல் அடிக்கும் ஐந்தாவது சதம் இது. இந்திய துவக்க வீரர்களில்இது இரண்டாவது அதிகபட்சமாக இருக்கிறது.
தொடர்ந்து வெளிநாட்டு மைதானங்களில் குறிப்பாக, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் கேஎல் ராகுல் விளையாடும் விதம் மெருக்கேறிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்கு முக்கிய காரணம் இதுதான் என்று சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார தினேஷ் கார்த்திக்.

“கேஎல் ராகுல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்பொழுது பலமுறை நான் கவனித்திருக்கிறேன். அதிக அளவில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய வீரர். வேகப்பந்து வீச்சாளர்களை விளையாடுவதற்கு விரும்புவார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் கவர் திசை மற்றும லாங்-ஆன் திசை இரண்டிலும் அடிக்கடி சிக்சர்கள் அடிப்பார். உள்ளூர் போட்டிகளில் இது கைகொடுத்தாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மை ஏமாற்றி விக்கெட் எடுத்து விடுவர். 140, 145+ வேகத்தில் வரும் பந்தை எல்லா நேரமும் அடித்துவிட முடியாது. பல நேரங்களில் போல்டு ஆகிவிடுவோம். இது துவக்க வீரருக்கு நல்லவிதமாக அமையாது.

ஆகையால் கே எல் ராகுல் தான் பேட்டிங் செய்யும்போது நிற்கும் விதம், தலையை வைக்கும் விதம் மற்றும் தோள்பட்டை பகுதிகளை சிறிதளவில் திருப்பி நிற்பது என சிறுசிறு மாற்றங்களை செய்துகொண்டார். இவற்றின் மூலமாக பந்தை எதிர்கொள்வதற்கு அதிக அளவு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. எந்த பந்தை அடிக்க முடியும். எந்த பந்தை அப்படியே விட்டு விடலாம் என இறுதியில் கணித்து விடமுடியும். ஏனெனில் அவரது தலை பகுதி மிகவும் சீராகவும் கால்பகுதி பந்தை நோக்கி நகர்த்தவும் உதவும். இதன் காரணமாகவே சமீபகாலமாக நல்ல சராசரியில் கேஎல் ராகுல் விளையாடி வருகிறார்.” என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார்.