தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கே எல் ராகுலுக்கு ஓய்வளித்துள்ளது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தொட்டா கணேஷ் விமர்சித்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியை இன்று (அக்டோபர் 4) ஹொல்கர் மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்த தொடர் உலகக் கோப்பை தொடருக்கு முன் பயிற்சி போட்டியாக இருக்கும் என்பதால், உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரர்களாக களமிறங்கும் வீரர்களை வைத்துதான் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில், கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இரு வீரர்களுக்கும் இந்திய அணி ஓய்வளித்துள்ளது.
மற்ற அணிகளெல்லாம் உலகக்கோப்பை தொடரில் எந்த வீரர்கள் விளையாடுவார்களோ அவர்களை வைத்து அதிகப்படியான போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், இந்திய அணி இப்படி ஒரு வினோதமான முடிவை எடுத்திருப்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இரு வீரர்களும் தற்போது தான் தங்களுடைய இழந்த பார்மை மீட்டெடுத்துள்ளதால் அவர்களை விளையாடவிடாமல் ஓய்வு அளித்துள்ளது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தொட்டா கணேஷ் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கே எல் ராகுலுக்கு ஓய்வளித்துள்ளது மோசமான முடிவு என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தொட்டா கணேஷ் தெரிவிக்கையில், “கே எல் ராகுல் தற்பொழுது தான் தன்னுடைய பழைய ரிதமை மீட்டெடுத்துள்ளார். அவரை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலியுடன் சேர்த்து ஓய்வளித்துள்ளது ஒன்றுமே புரியாதது போல் உள்ளது. இந்த இரண்டு வீரர்களும் தற்போதுதான் தங்களுடைய இழந்த பார்மை மீட்டெடுத்தனர். எப்பொழுது நல்ல பார்மில் இருக்கிறோமோ அப்பொழுதுதான் அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்று அதிக ரன்களை அடிக்க வேண்டும், அப்படிதான் நான் இதுவரை நம்பிக் கொண்டிருந்தேன்” என்று தொட்டா கணேஷ் இந்திய அணியின் தேர்வை விமர்சித்துள்ளார்.