தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக ஜனவரி மாதம் 19ஆம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் துவங்க இருக்கிறது.

விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ரோகித் சர்மா முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு, நடைபெறும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். ஆகையால் ரோகித் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கிடையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகினார். இந்திய தேசியக் அகாடமியில் மெல்ல குணமடைந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தற்போது வரை முழுமையாக குணமடையவில்லை. தேர்வுக்குழுவினர் அவர் மீது முழு கவனத்துடன் இருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா சென்று பங்கேற்கும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான பட்டியல் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பிசிசிஐக்கு அறிக்கைகளாக கொடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெறுவாரா? என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிவுக் குழு அதிகாரி ஒருவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ரோகித் சர்மா முழுமையாக குணமடையவில்லை என்றால் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்படலாம் என ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. தற்போது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வரும் ராகுல் முதல் இன்னிங்சில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இது ஒரு நல்ல அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. தேர்வுக்குழு இதனையும் கவனத்தில் கொள்வர்.