இலங்கை அணியின் பந்துவீச்சில் வாணவேடிக்கை காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்; 213 ரன்கள் குவித்தது இந்திய அணி
இலங்கை அணியுடனான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி இலங்கையின் பல்லகலே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் அதிரடி துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த போதிலும், சுப்மன் கில் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த போதிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்ததாக களத்திற்கு வந்த இந்திய டி.20 அணியின் புதிய கேப்டனான சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி, கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்துவிட்டு மொத்தம் 26 பந்துகளில் 58 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணியின் மற்றொரு அதிரடி நாயகனான ரிஷப் பண்ட்டும் தன் பங்கிற்கு இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 33 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்ட மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.