ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் இல்லை… முதல் டி20 போட்டியில் இந்த 11 வீரர்களுக்கே ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்; ஆகாஷ் சோப்ரா கணிப்பு
முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்தியா இலங்கை இடையேயான முதல் டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி மும்பையில் இன்று (3-1-23) நடைபெற உள்ளது.
இலங்கை அணியுடனான இந்த டி.20 தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் அடுத்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பிரத்யோக டி.20 அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிசிசிஐ., இதற்கான முதல் முயற்சியாக இலங்கை அணியுடனான டி.20 தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து, இளம் வீரர்கள் பலருக்கு டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் இடம்பெறாத இளம் இந்திய அணி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளதால், இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, முதல் டி.20 போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
துவகக் வீரர்களாக இஷான் கிஷனிற்கும், சுப்மன் கில்லிற்கும் இடம் கிடைக்கும் என கணித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ருத்துராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி போன்ற வீரர்களுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவுடன், அக்ஷர் பட்டேல் அல்லது வாசிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்சல் பட்டேல், உம்ரன் மாலிக் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.