ஹர்திக் பாண்டியா போன்று இன்னொரு வீரரை ரெடி பண்ணவேண்டிய நேரம் வந்துவிட்டது என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் இந்திய அணியில் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஓர் ஆண்டாக இவரது பங்களிப்பு உச்சத்தில் இருப்பதால் தொடர்ச்சியான வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகள் இந்திய அணியில் கொடுக்கப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்துக்கொண்டு கேப்டன் பொறுப்பும் கொடுத்தது.
எப்படி செய்வார்? இதற்கு முன் கேப்டன் அனுபவம் இல்லாத இவரை எதற்காக கேப்டனாக நியமித்தார்கள்? என்கிற பல்வேறு கேள்விகள் நிலவின. கூடுதலாக, குஜராத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே குதிரை கொம்பாக இருக்கும் என்றும் விமர்சித்தனர்.
அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தனது கேப்டன் பொறுப்பில் சாதித்து காட்டி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. கேப்டன் பொறுப்பேற்ற முதல் சீசனில் கோப்பையை தட்டிச் சென்றார்.
அதேநேரம் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் படுமோசமாக செயல்பட்டு வந்ததால், அவருக்கு ஓய்வு கொடுத்து ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் நியமித்து பரிசோதித்து வருகிறது பி சி சி ஐ.
டி20ல் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவதற்கு சர்தல் தாக்கூர் தீபக் சகார் போன்றோர் போராடி வந்தாலும், தற்போது வரை அதற்கு நிகராக யாரும் வர முடியவில்லை.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம். அடிக்கடி அவருக்கு அப்படி நடக்கிறது. அந்த தருணத்தில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துவிடக்கூடாது என்பதால், ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்பக்கூடிய இன்னொரு வீரரை இப்போது இருந்தே தயார் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:
டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை முழுமையாக நம்புகிறது. அவரை சார்ந்தே இருக்கிறது. இப்படியான நேரத்தில் அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் மொத்த சிக்கலும் இந்திய அணிக்குத்தான். ஆகையால் அதற்கு முன்னேற்பாடாக விரைவில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு நல்ல பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தயார் செய்ய வேண்டும். அவ்வபோது பரிசோதனைகளையும் செய்து பார்க்க வேண்டும். இது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்கும். எந்தவித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கும் உதவும்.” என்றார்.