அஸ்வினை அணியில் சேர்த்ததர்க்கு பதில் சஹாலை சேர்த்திருந்தால் ஜெயித்திருப்போம் ; தினேஷ் கார்த்திக் சொல்கிறார்..
2022 டி.20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினுக்கு பதில் சஹாலை தான் இந்திய அணி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீர தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், ஆசிய கோப்பை உலக கோப்பை தொடர் என இரண்டிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக களம் இறக்கப்பட்டார்.
இருதரப்புத் தொடர்களில் சிறந்த ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்கால் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 2022 டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இவரை இந்திய அணி முற்றிலுமாக ஓரம் கட்டியுள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் குறித்தும் இந்திய அணியில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் தினேஷ் கார்த்திக்,2022 t20 உலக கோப்பை தொடரில் அஸ்வினுக்கு பதில் இந்திய அணியில் சஹால் இடம் பெற்றிருந்தால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில்,“அணியின் தேர்வு என்பது முழுக்க முழுக்க அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொருத்து அமையும். நேர்மையாக சொல்லப்போனால், இந்திய அணியின் அதிரடி ஆள்ரவுண்டர் அஸ்வின் 2022 உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் போகப்போக இவருடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. ஆனால் இந்த தொடரில் மட்டும் சஹால் விளையாடியிருந்தால் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திருப்பார். மேலும் சஹால் நிச்சயம் இந்திய அணியின் சுவாரசியமான தேர்வாகவும் இருந்திருப்பார். ஆனால் இதுவெல்லாம் தொடர் முடிந்த பின்பு நமக்கு தெரிகிறது” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2022 டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணி இடம் பிடித்த சஹால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.