2022ம் ஆண்டு டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதே தனது தற்போதைய இலக்கு என ஐபிஎல் ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஆவேஸ் கான் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி 16 போட்டிகளில் பங்கேற்று குறைந்த ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 14 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய ஆவேஷ் கான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் மற்றும் அதனையொட்டிய நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட ஆவேஷ் கானுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தனக்கு கொடுக்கும் வாய்ப்பில் ஆவேஷ் கான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியின் ரெகுலர் வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமான அவேஷ் கான் செய்தியாளர்கள் சந்திப்பில் உலக கோப்பை தொடர் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் தனது தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் மிகப்பெரும் கனவு, தற்பொழுது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை நான் சரியாக பயன்படுத்திக் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவுவேன், ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் உலக கோப்பை தொடரில் பங்கேற்று தனது அணிக்கு கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்பதுதான் மிகப் பெரும் கனவாக இருக்கும், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடி இந்திய அணிக்கு கோப்பை வெற்றி பெற்று கொடுப்பேன் என்று அவர் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்த ஐபிஎல் ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு தான் விலை போவேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் லக்னோ அணி என்னை 10 கோடி ரூபாய்க்கு தேர்ந்தெடுத்துள்ளது , இதைக் கேள்விப்பட்டதும் 5 நொடி உறைந்து போய்விட்டேன், ஏலம் நடைபெறும் பொழுது நான் அதை கவனிக்கவில்லை, ஏனென்றால் அப்பொழுது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன் என்றும் ஆவேஷ் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.