விராட் கோலிக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுப்பது முட்டாள்தனம் என்று விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.
இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐ.,யும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.
விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் விராட் கோலி ஓய்வு எடுத்துள்ளதால் அவருக்கு பதில் 3வது பேட்டிங் லைன்-அப்பாக களமிறங்கி விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இதன் காரணமாக விராட் கோலியை ஒரேடியாக நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கினால் நன்றாக இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா விராட் கோலிக்கு மாற்று வீரர் யாருமே கிடையாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார் சர்மா பேசுகையில், “இதை நான் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன் விராட் கோலிக்கு பதில் இந்திய அணியின் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய தகுதியான ஒரு வீரர் கிடையாது, ஆனால் அந்த இடத்தில் இளம் வீரர்களை பயிற்றுவிக்க வேண்டும், மேலும் அந்த இடத்தில் பல்வேறு விதமான சோதனைகளை செய்ய வேண்டும், ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்பது தேவையில்லாத ஒன்றாகும், ஸ்ரேயாஸ் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறுகிறார். குறிப்பாக ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் திணறுகிறார். மேலும் கடந்த கால வரலாற்றில் அவர் ஷார்ட் பீட்ச் பந்துகளில் அதிகமாக தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளார். என்னை பொருத்தவரையில் 4 அல்லது 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்வது தான் சிறந்தது, விண்டிஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் பேட்டிங் செய்யும்பொழுது பந்து அந்த அளவிற்கு ஸ்விங்காகவில்லை மேலும் அவருக்கு நேரடியாகவும் பந்து வீசப்படவில்லை. என்னை பொருத்தவரையில் இந்த இடத்திற்கு அவர் இன்னும் தகுதியானவராக இருக்க வேண்டும் ” என்று ராஜ்குமார் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.