நண்பேண்டா…எனக்கு எப்படிபட்ட பிரட்சனை வந்தாலும் இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்; மனந்திறந்து பேசிய சஹால்..
எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இவர்களுடன் தான் நான் மனம்விட்டு பேசுவேன் என இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சீனியர் சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சஹால் எப்படி சுழற் பந்துவீச்சுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவரோ அதேபோன்று குறும்புத்தனத்திற்கும் பெயர் போனவராக இந்திய ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.
சர்வதேச இந்திய அணிக்காக விளையாடுகிறாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவும் பொழுதுபோக்குடன் ஏதாவது பதிவேற்றம் செய்து கொண்டும் வாழ்க்கையை மிகவும் ஜாலியாக வாழக்கூடிய சஹால்.,சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் விளையாட்டை தவிர்த்து தன்னுடைய சொந்த வாழ்வில் நிகழ்வுற்ற சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார்.
அப்பொழுது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ.. அல்லது ஏதாவது ஒன்றை கலந்து பேசவேண்டும் என்றால் ஒரு சில வீரர்களுக்கு போன் செய்து பேசுவேன் என்று வெளிப்படையாக அதில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சஹால் தெரிவிக்கையில்., “என்னுடைய அணியில் இருப்பவர்கள் என்னுடைய சகோதரர்கள், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் உட்பட பலருடன் நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரட்சனைகள் குறித்து பேசுவேன்.அதற்கு நேரம் காலமே கிடையாது. அவர்கள் எப்பொழுதும் என் பிரட்சனைகளை கேட்க தயாராக இருப்பார்கள். நாங்கள் எங்களுக்கு மத்தியில் அதிக நேரம் செலவிட்டிருப்போம். நாங்கள் ஒன்றாக ஒரு மாதங்கள் கூட சேர்ந்து இருந்திருக்கிறோம் நாங்கள் ஒரு குடும்பம் போல இருப்போம். நம்முடைய சக வீரர்களிடம் கலந்து பேசுவது போல் நம்முடைய குடும்பத்தார்களிடம் கலந்து பேச முடியாது. நாங்கள் தன்னுடைய சொந்த விஷயம் எதிர்கால திட்டம் என அனைத்தையுமே கலந்து பேசுவோம். நான் என் மனைவியுடன் பேச முடியாத விஷயத்தை என் நண்பர்களுடன் பேசுவேன் அவர்கள் எப்பொழுதும் அதை கேட்பதற்கு தயாராக இருப்பார்கள்” என சஹால் தெரிவித்திருந்தார்.