நீயெல்லாம் நல்லா வரணும்டா தம்பி,இளம் நம்பிக்கை நாயகன் யஷஷ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டிய முன்னாள் வீரர்..
இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் நீண்ட காலம் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடமாகவே மிக சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால்.நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சதம், 5அரைசதங்கள் அடித்து 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது சராசரி 52க்கும் மேல் இருந்தது.
இதன் காரணமாக இவரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைக்கு உடன்பட்ட இந்திய அணி தேர்வாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலை விளையாட வைத்தனர்.
இத்தொடரில் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் விளையாடிய யஷஷ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் (171ரன்கள்)சதம் அடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார். இதனால் ஜெய்ஸ்வாலை பாராட்டி வருவதோடு அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்., யஷஷ்வி ஜெய்ஸ்வால் நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்ததாவது., “ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். என்னதான் அவர் இரட்டை சதம் அடிப்பதை தவற விட்டிருந்தாலும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார் என எனக்கு தோன்றுகிறது. அவரிடம் திறமைக்கு பஞ்சமே கிடையாது. இருந்த போதும் அவருக்கு நான் கூறும் அறிவுரை கடின உழைப்பை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்பதே,அப்படி செய்தால் மட்டுமே இந்த உலகத்தையே ஆள முடியும்” என்று ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டை தெரிவித்ததோடு அறிவுரையையும் ஹர்பஜன்சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.