முடிந்தவரை போராடி பார்த்த மெயர்ஸ்…. 23 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது இந்திய அணி !!
ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி ஹரேராவில் நடைபெற்றது.
கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 49 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. ஜிம்பாப்வே அணியின் முதல் மூன்று முக்கிய வீரர்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டியன் மெயர்ஸ் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் தனி ஆளாக போராடி 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பரான க்ளைவை (37) தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், ஆவேஸ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.