பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியால் வெல்வது சற்று கடினமான ஒன்றுதான் என கூறியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை அண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
முதல் முறையாக இந்திய அணி கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை ஆடியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் போது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வற்புறுத்தியது. இதற்கு ஒப்புக்கொண்ட பிசிசிஐ ஒரே ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த அனுமதி அளித்தது.
அட்டவணையில் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடக்க விருக்கும் டெஸ்ட் போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அட்டவணையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை பகலிரவு டெஸ்ட் போட்டியில் வீழ்த்த இயலுமா? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
“கோல்கட்டாவில் நடந்த பகலிரவு டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள், பிங்க் பந்தில் கடினமான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய பவுலர்களும் தங்கள் பங்கிற்கு அசத்தினர். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் இந்திய அணி வீரர்கள் வல்லவர்கள். இதனால் இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படும் என எதிர்பார்க்கிறேன்.
அதேநேரம், இந்திய அணியை விட, நாங்கள் அதிகமான பகலிரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம். இது எங்களுக்கு சற்று சாதகம் தான். அடிலெய்டு மைதானத்தில் நாங்கள் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளோம். ஆதலால் எங்களால் வெல்ல முடியும்.” என நம்பிக்கை தெரிவித்தார்.