இந்திய அணி உலகக்கோப்பையை இழந்ததற்கு இது தான் காரணம்; சுனில் கவாஸ்கர் வேதனை
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி இழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஓபனாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அறியப்பட்ட அணிகளில் முதன்மையான அணியாக இருந்த விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து, கோப்பையையும் பறிகொடுத்து வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டாலும், இந்த தொடரில் இந்திய அணியின் தோல்வியை முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் தற்பொழுதும் கூட ஏற்றுகொள்ள முடியாமல் தவித்து வருவதை அவர்களின் பேட்டிகள் மற்றும் பேச்சுகள் மூலம் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அம்பத்தி ராயூடுவை அணியில் எடுத்து அவரை நான்காவது இடத்திற்கு பயன்படுத்தியிருந்தால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றியிருக்கும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதற்கு நான்காவது இடம் சரியாக அமையாதது தான் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது;
இந்திய அணியின் டாப் 3 பேட்டிங் ஆர்டர் அபாரமானது. அதனால் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே களத்திற்கு வந்து நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை ஆடும் வாய்ப்பை உலக கோப்பையில் 4 மற்றும் 5ம் வரிசை பேட்ஸ்மேன்கள் பெறவில்லை. மிடில் ஆர்டரில் சரியான 4ம் வரிசை வீரரை உலக கோப்பைக்கு அழைத்து செல்லாதது பெரிய தவறு. ஒருவேளை சரியான வீரரை தேர்வு செய்து அழைத்து சென்றிருந்தால் உலக கோப்பையில் கதையே மாறியிருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.