தோனியின் சேவை நிச்சயம் இந்திய அணிக்கு தேவை; ஸ்ரீகாந்த் சொல்கிறார்
அடுத்த உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வெற்றி நாயகனுமான தோனி தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கோஹ்லியின் தலைமையில் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு பேட்டிங்கில் தோனி சொதப்பி வந்ததால் அவர் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்ச்சனங்கள் வலுத்தது. குறிப்பாக கடந்த வருடத்தின் ஒரு தொடரில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத தோனி, கடந்த ஒரு வருடத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மொத்தமே 300 ரன்களுக்கு குறைவாக எடுத்திருந்தார்.
இதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை தோனி தாக்குபிடிப்பதே சிரமம் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருட காலமாக தன் மீது வைக்கப்பட்டு வந்த ஒட்டுமொத்த விமர்ச்சனத்திற்கும் தோனி கடந்த ஒரே வாரத்தில் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான நடப்பு ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து இந்த ஆண்டை செம மாஸாக துவங்கியுள்ள தோனி, மீண்டும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்பியுள்ள தோனியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தலையில் வைத்து கொண்டாடி வரும் நிலையில், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் தோனியை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் எடுப்பேன். மற்ற தொடர்களை விட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது முற்றிலும் மாறுபட்டது. தோனியை போன்ற சீனியர் வீரர்கள் ஒவ்வொரு அணியில் மிகப்பெரும் பங்காற்றுவார்கள். உலககக்கோப்பைக்கான இந்திய அணியில் தோனியின் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை, உலகக்கோப்பையில் தோனி முக்கியமான ஆளாக இருப்பார். கேப்டனில் இருந்து ஒட்டுமொத்த வீரர்களுக்கும் அவரது ஆலோசனைகள் நிச்சயம் கைகொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.