மிக சிறந்த பந்துவீச்சாளர்கள் எந்த அணியில் உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
சமீப காலமாக இந்திய அணியின் பந்துவீச்சு மற்ற அணிகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய மண்ணில் எதிர்கொள்ள பலரும் அச்சப்படுகின்றனர். அந்த அளவிற்கு சிறப்பான செயல்பாடுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடரிலும், அதன் பிறகு நடைபெற்ற தொடர்களிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் பேட்ஸ்மேன்களுக்கு சரி சமமாக இருக்கின்றது என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் இந்திய அணி வென்றிருக்கிறது. தென்னாபிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டியில் உமேஷ் யாதவ், சமி மற்றும் இஷாந்த் சர்மா முவரும் வேகப்பந்துவீச்சில் மிரட்டினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான தொடருக்கு தற்போதிருக்கும் வேகப்பந்துவீச்சு மிகவும் சவாலாக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மிரட்டினர்.
இந்நிலையில், சமகால டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய இரு அணிகளில் எந்த அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கின்றது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருது தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:

“இந்திய வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை, பும்ராஹ் மற்றும் சமி இருவரும் இரண்டு வருடங்களாக மிக சிறப்பாக செயல்படுகின்றனர். உமேஷ் மற்றும் இஷாந்த் இவர்களுக்கு ஈடுகொடுக்க முயற்சிக்கின்றனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்திய மண்ணில் ஜொலிக்கின்றனர். ஆனால், ஆஸ்திரேலியா மைதானத்தில் இன்னும் விக்கெட் எடுக்க திணறுகின்றனர்.
ஆனால், லியோன் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பந்துவீசுகிறார். அதேபோல ஆஸ்திரேலியா அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் அணியில் இருப்பது கூடுதல் பலம்.

முன்னேறும் அணியாக இந்தியா இருப்பதால், ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் சற்று கவனத்துடன் ஆட வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்றார்.